Wednesday, February 29, 2012

தமிழ்நாடன்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னை வட்டத்தில் குணவாசல் என்ற சிற்றூரில் ஆசிரியர் வெ.கண்ணுசாமி அவர்களுக்கும், கலையழகி அவர்களுக்கும் முதல் மகனாக 26-05-1973 அன்று பிறந்தேன்.

குணவாசலிலும், 12ஆம் நிலை வரை காட்டுமன்னை பர்வதராச குருகுலம் மேல்நிலைப்பள்ளியிலும் படித்துப்பின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 1994ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தேன்.

சென்னை, மும்பை, விசாகப்பட்டிணம் முதலிய இடங்களில் பணி புரிந்தபின் தற்போது வரை குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

பள்ளிப்பருவம் தொட்டு பெரியாரியம் தமிழ்தேசியம் ஈழத்தேசியம் மார்சியம் இலக்கியம் அரசியல் துறைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன்.

பகுத்தறிவு சிற்றூடகப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளதோடு, பொங்குதமிழ் மன்றம் என்ற அமைப்பிலும் குவைத் தமிழர் கூட்டமைப்பிலும் செயல்பட்டு வருகிறேன்.


தாயக முகவரி:

குணவாசல், ஆயங்குடி வழி, காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம் - 608306.

குவைத் முகவரி:

அஞ்சல் பெட்டி எண்: 9027, அகமதி- 61001, குவைத்.

கைபேசி: 00965-66852906

மின்னஞ்சல்: தமிழ்நாடன் (thamizhnadan@gmail.com)

முகநூல்:தமிழ்நாடன்

டுவிட்டர்: தமிழ்நாடன்

சுகைப்: thamizhnadan

Monday, February 27, 2012

”தானே” வருமா மாற்றம்?


தமிழகம் சவால்களை தாக்குதல்களை வெளியிலிருந்து மட்டுமல்ல உள்ளும் சந்தித்து வரும் அவலம் எப்பொழுதுமுண்டு. இதில் இணைந்துகொள்வதில் இயற்கைக்கு என்றும் அலாதி பிரியம் போலும். கடற்கோளைப் படித்து மறந்த நமக்கு 2004இல் கடல்தாயின் கோரமுகம் கண்டு ஆடித்தான் போனோம்.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆண்டுதோறும் புயலால் பாதிப்புகள் ஏற்படுவதும், அதற்கென சிறு உதவியினை விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கிவிட்டு, பெரும் தொகையினை அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இத்தாக்கம், நாகை, தஞ்சை, கடலூர், பாண்டி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகமாயிருக்கும். இக்காலங்களில் மீனவர்கள், உழவர்கள், சிறு தொழில் முனைவோர், வியாபாரிகள் என பல்துறை தொழில் வணிகர்கள், தொழிலாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவர்.

இன்று வரை இப்பாதிப்புகளைக் குறைக்கவோ தடுக்கவோ எவ்விதமான நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமின்றி, அறிக்கை விட்டு ஆட்சி செய்துவருகின்றனர் தமிழகத்தை ஆள்வோர்.

புயலின் வேகத்தைக் குறைக்க கடலோரத்தில் மரங்கள் வளர்ப்பதும், வளர்ந்த மரங்களைக் காப்பதும் முதன்மையானதாகும். இதுகுறித்தான கவலை தமிழகத்தை ஆள்வோருக்கு என்றுமே இருக்கவில்லை. கடலூர் பகுதியில் காணப்படும் சதுப்புநிலக்காடுகளை காப்பதற்கோ, அழிவிலிருந்து மீட்கவோ கூட ஒரு முயற்சியுமில்லை.

இந்நிலையில், வழக்கமாக வரும் ஒரு புயலைத்தான் உழவர்கள் உள்ளிட்ட அப்பாவிகள் பலரும் எதிர்பார்த்து இருந்திருப்பர். ஆனால், அனைத்தையும் எதிர்நோக்கி மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரம், வரும் புயலுக்கு பெயர் சூட்டுவிழா நடத்தி மகிழ்ந்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பெயர்சூட்டி மகிழ முடிந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டப் பின்னும் தக்க உதவியினையோ, நிவாரணப் பணிகளையோச் செய்ய முடியாமல் போனதுதான் தமிழக மக்களின் கெட்ட வாய்ப்பாகும்.

மண்வெட்டியால் ஒரு கொத்து கொத்தினால் பீறிட்டெழுந்த தண்ணீர் இன்று 400 அடி தோண்டி எடுக்க வேண்டிய சூழ்நிலையால், கிராமங்களிலும் கூட குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். 90களில் இங்கிருந்துதான் சென்னைக்கு வண்டிகளில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இன்று இதே மக்கள் குடிதண்ணீருக்கு அவதிப்படும்போது, சென்னையிலிருக்கும் ஆட்சியாளர்கள் அமைதியாயிருப்பதுதான் வேதனை.

இன்று(11-02-2012) மாலை 0700 மணிக்கு சன் செய்திகளில் இயக்குனர் தங்கர்பச்சான் உருவாக்கிய தானே புயல் குறித்தான ஆவணப்படம்தான் இவ்வுண்மைகளை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்தப் பதிவாக இருக்கின்றது. வேரோடு சாய்ந்த மரங்களை வெட்டி எடுக்கவே ஆறு மாதங்களாவது தேவைப்படும் என்பதும், அதனை வாங்கிக்கொள்ளக்கூட யாருமே இல்லையென்பதும் வேதனையிலும் வேதனை. தங்கர்பச்சான் குறிப்பிடுவதுபோல இது உலகத்திற்கே ஏற்பட்ட பெருங்கேடு. இனியேனும் அரசு இயந்திரம் சுறுசுறுப்படைய வேண்டும். அரசுசாரா நிறுவனங்களும் தொண்டு அமைப்புக்களும் பிற அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் இம்மக்கள் வாழ்வில் ஒளியேற்றவேண்டும்.

இதற்கு முன்மாதிரியாக, குவைத் பொங்குதமிழ் மன்றம் முதல் கட்டமாக உரூபாய் 50,000த்தினை குவைத் வாழ் தமிழர்களிடம் திரட்டி புயல்பாதித்தப் பகுதிகளில் நிவாரணப்பணிகளில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளது, மேலும் தொடர்ந்து இயன்ற அளவில் செய்யவேண்டும் என்பதிலும் உறுதியாயுள்ளது.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு அமைச்சர்களையும் அரசு இயந்திரங்களையும் முடிக்கிவிட்டுள்ள தமிழக அரசு, இலட்சக்கணக்கான மக்கள் துன்புறுவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ?.

”தானே” வருமா மாற்றம்? அல்லது மக்களால் மாற்றம் வருத்துவதுதான் முடிவாகுமா?.

வீரத்தாயவள் அற்புதம் அம்மாள்


உறுமும் புலியை
முறம்கொண்டு விரட்டும்
வீரத்தாயவள் அற்புதம் அம்மாள்..

இரு பத்து வருடங்கள்
இடையறாப் போராட்டம்
இழக்கமாட்டோம் இனியும்
எங்கள் பேரறிவாளனை...

பேராயக்கட்சியினரே
பேயாட்டமிடும் சோனியாவே
பல்லாக்குத்தூக்கும் சிதம்பரம் வகையறாவே...

ஓயமாட்டோம் இனி
ஒருவரையும் இழக்காமல்
காப்பதே எங்கள் பணி...

பொய்வழக்குகளைப்
புறந்தள்ளுவோம்
புதுப்படைகளை நாங்கள்
உருவாக்குவோம்...

வீரத்தாயவள் அற்புதம் அம்மாள்..