தோழமையீர்!
வணக்கம்.
தாயைப் பிரிந்த சேயின் மனநிலையோடு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தாய்நாட்டின்
மீதான பரிவும் ஏக்கமும் நிறைந்த மனத்துடனே அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் இருந்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் உருவாகும் பிரச்சனைகள், அரசியல் மாற்றங்கள், தொழில், உற்பத்தி
நிலை என சமூக அரசியல் பொருளாதார நிலைகளை உன்னிப்புடன் கவனித்து வருவதோடு எங்களால் இயன்ற
பங்களிப்பையும் நல்கி வருகின்றோம்.
அண்மைக் காலங்களில் தமிழினப் பிரச்சனைகளில் பொதுமக்களே தன்னெழுச்சியாக போராடுவதோடு,
தொழில்துறையினர் உள்ளிட்ட பிறரும் இவ்வகைப் போராட்டங்களில் கலந்துகொள்வதும், இப்போராட்டங்களில்
அரசியல் கட்சிகள் கலந்துகொள்வதும் எமக்கெல்லாம் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கின்றது.
அரசின் முடிவுகளை ஊடகங்களும் பொதுமக்களும் ஏனைய அரசியல் அமைப்புகளும் பிரச்சனையின்
அடிப்படையிலேயே அணுகப்பட்டமை புதிய மாற்றத்தை எமக்குத் தெளிவுபடுத்தியது. முத்தாய்ப்பாக
அய்நா அவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்ற
கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்தமை
தமிழினத்தின் புத்துணர்ச்சி என்றேக் கருதினோம். இதே நிலை தமிழினம் சார்ந்த அனைத்து
முடிவுகளிலும் எதிரொலிக்க வேண்டுமென்பதே உலகத்தமிழர்களின் விருப்பமாகும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளத்தின் இன்றைய நிலை எம்மை பதைபதைக்க
வைத்துள்ளது. உலகத்தமிழர்களுக்கு தாயாகவிருந்து அரவணைத்துச் செல்ல வேண்டிய தமிழகத்தில்
இன்று ஒரு பகுதியினர் ஏதிலிகளாக, கைதிகளாக, வாழ்வியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, தண்ணீர்
மின்சாரம் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு
மிகக்கொடியதொரு நிலையில் உள்ளனர் என்ற செய்தி எம்மை நிலைகுலையச் செய்துள்ளது.
அரசாங்கம் என்பது வேறு மக்கள் என்போர் வேறல்ல, மக்களுக்கானதே அரசு. இதை இந்தியாவை
தமிழகத்தை ஆள்வோர் நன்குணர்ந்து, மக்களின் உணர்விற்கும் தேவைக்கும் மதிப்பளித்து நடந்துகொளல்
வேண்டும். இதைத்தான் தமிழக மக்களும் உலகெங்கும் விரவி வாழும் தமிழர்களும் விரும்புகின்றோம்.
இந்நிலையில் ஏற்படும் மாற்றங்களை அரசிற்கு உணர்த்தவும், மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும்
உணர்ந்து அவர்களோடு இணைந்து அரசினை வற்புறுத்த வேண்டிய கடமை அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும்
உள்ளது.
அந்த வகையில், தமிழக அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி 6 மாதங்களுக்கும்
மேலாக கூடங்குளம் அணுவுலைத் திட்டத்தை நிறுத்தக்கோரி நடைபெறும் மக்கள் போராட்டத்தில்
உடனடியாக கலந்துகொண்டு, அவர்கள் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பெறுவதை உறுதிசெய்ய
வேண்டும். காவல் துறையால் ஏற்படுத்தப்படும் பதட்டத்தை தணித்து, மக்கள் அச்சமின்றி வாழ
வழிகாண வேண்டும்.
தமிழகம் முழுமைக்கும் இம்மக்களுக்கு ஆதரவான நிலையினை உருவாக்கி, நடுவண் அரசிற்கும்
தமிழக அரசிற்கும் அழுத்தம் தந்து சரியான நிலைப்பாட்டினை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
காந்திய தேசம் அகிம்சை வழி என்று மேடையில் முழுங்கிவிட்டு அரசிற்கெதிராக போராடுவோரை
ஆயுதம் கொண்டு தடுக்கும் நிலையினை மாற்ற வேண்டும்.
போராட்டங்களும் அதன் முறைகளும் தேர்ந்தெடுக்கப்படுபவை அல்ல, திணிக்கப்படுபவை.
அமைதியான முறையில் போராடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைப்பது கொடுங்கோண்மையாகும்.
தமிழக அரசே, அரசியல் இயக்கத்தோரே, தமிழக பொதுமக்களே! இடிந்தகரை மக்களுக்கு துணை
நிற்போம்! அமைதியான பாதுகாப்பான தமிழகத்தை உறுதிசெய்வோம்!.
தமிழ்நாடன்
ஒருங்கிணைப்பாளர்