அறிவியலும் தொழில்நுட்பமும் கணிணியும் முன்னிற்கும் இக்காலத்தில் மக்கள் வளமோடும் மகிழ்ச்சியொடும் வாழ்வதாகத்தான் கருதிக்கொண்டுள்ளனர். ஆனால் நடப்பெதென்னவோ அழிவைநோக்கித்தானுள்ளது.
வளரும் இளம் பருவத்தினரும் பள்ளி மாணவர்களும் கூட கத்தியும் துப்பாக்கியும் தூக்கித்திரிகின்றனர். பொய்யும் புரட்டுக்களும் கொள்ளையும் கொலையுமென கொடுமனங்கொண்டலைகின்றனர் மனிதர்கள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யார்க்காரணம்? என்ன செய்ய வேண்டும்?. அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய விடயத்தை, சென்னைப் பள்ளியில் கொலையுண்ட உமா ஆசிரியை வழக்கில் அவள் விகடனில் கருத்துத் தெரிவித்துள்ள சென்னை மனநல மருத்துவர் திரு.திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
”மொத்தப் பிரச்னைக்குமே காரணம்... நம்முடைய வளர்ப்பு முறையும், வாழ்க்கைச் சூழலும் தாறுமாறாக மாறிப்போய்க்
கிடப்பதுதான். இன்றைய படிப்பு அறிவை
வளர்ப்பதற்கு பதிலாக, பொருளாதார ஆதாயத்தை
நோக்கியதாகவே மாறியிருக்கிறது. தாய்மொழிப் பாடங்கள் வழியே மாணவர்களுக்கு புகுத்தப்படும்
நன்னெறிகள், நீதிபோதனைகள் எல்லாம் குறைந்துவிட்டன. நற்குணங்களை
வளர்த்தெடுக்கும் அம்சங்கள் மொழி இலக்கியங்களில்தான் அதிகம்
விரவிக் கிடக்கிறது. விரல்விட்டு எண்ணும் அளவிலான மாணவர்கள்கூட
இதையெல்லாம் இன்றைக்குப் படிப்பதில்லை. அறிவியல், கணிதம் என்று இயந்திரத்தனமான
பாடங்களையேதான் பிஞ்சுக் குழந்தையிலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். நம்முடைய வற்புறுத்தலால்!.
ஊடகங்களில் அதீதமாகக் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள், குடும்பத்தில் பெற்றோரிடம் நடக்கும் தொடர் மோதல்கள், இன்னபிற
அம்சங்கள் எல்லாமும் சேர்ந்து சிறுவயதிலேயே பெரும் குற்றங்களைச் செய்யும்
அளவுக்கு மனதைத் தூண்டுகின்றன'' என்று
பிரச்னையை வகைப்படுத்துகிறார் மருத்துவர்.”
தாய்மொழிக்கல்வி, செழுமையான இலக்கியங்கள், மலிவான ஊடகங்கள் இம்மூன்றும் முதன்மையான காரணிகள் என்கிறார்.
தாய்மொழிக்கல்வி தமிழர்கள் மறந்தவொன்றாகவுள்ளது.
மிகச்சிறந்த உலகின் தொன்மையான நன்னெறிவளர்க்கும் இலக்கியம் தமிழில் கொட்டிக்கிடக்கின்றது, ஆனால் கவனிப்பார் யாருமில்லை.
மிகமலிந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று கூறவேண்டும். சமூக அக்கறையின்றி தமிழர் பண்பாட்டை சிதைத்து வரலாற்றை மறைத்து உலக அழிவுப்போக்கிற்கு பெரிதும் துணை நிற்கும் இவ்வூடகங்கள்தாம் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்று விளங்குகின்றன.
இவற்றில் நாம் மாற்றம் கொண்டு வராத வரை சமூக அவலங்கள் மாறப்போவதில்லை, அனைவரும் உணர்ந்து கொள்வோம், புத்துலகம் படைப்போம்.
தமிழர் மொழியும் கலையும் இலக்கியமும் ஒன்றே இதற்கான வழியென்பதை புரிந்துகொள்வோம்.
No comments:
Post a Comment